இஸ்லாத்தில் பயன்படுத்தப் படும் கலைச் சொல்கள்

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....

'இஸ்லாத்தில் பயன்படுத்தப் படும் கலைச் சொல்கள்' தொகுப்பில் இஸ்லாமிய சமுதாயத்தால் பயன்படுத்தப் படும் கலைச் சொல்களின் விளக்கங்களை தருகிறோம். இது இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்பும் மாற்று மத நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம் (இறைவன் நாடினால்).

அல்லாஹ்- அல்லாஹ் என்பதன் தமிழ் பொருள் 'வணக்கத்துக்குரியவன்' என்பதாகும். இது இறைவனுக்கு மட்டும் பயன்படுத்தப் படும் வார்த்தையாகும். மற்றும் உலகில் உள்ள வேறு எந்த பொருளுக்கும் பொருந்தாது ஒருமையுடன் படைத்த படைப்பாளனை குறிக்கும் வார்த்தையாகும் 'அல்லாஹ்'(கடவுள்).

அலை- (அலை) என்பது 'அலைஹிஸ்ஸலாம்' என்பதன் சுருக்கமேயாகும். இதன் பொருள் 'அவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டுமாக' என்பதாகும். இறைத் தூதர்களின் பெயர்களை சொல்லும் போது 'அலைஹிஸ்ஸலாம்' என்று இறைவனின் சாந்தி கூறுவது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக்க பட்டுள்ளது.

ஸல்- 'ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்' என்ற பிரார்த்தனையின் சுருக்கமே (ஸல்) எனப்படும். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக என்பதே இதன் பொருள். முஹம்மது நபி அவர்களின் பெயரை குறிப்பிடும் இடங்களில் இவ்வாறு கூறுவது முஸ்லிம்களின் கடமையாகும். இது 'சலவாத்' என்று சொல்லப்படும்.

ஸலாம்- இது 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதையே குறிக்கும். இதன் பொருள் 'உங்கள் மீது 'அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக' என்பதாகும். இது உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் முகமனும் வாழ்த்தும் ஆகும்.

முஸ்லிம்- முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் ஆகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன். இஸ்லாத்தின் அடிப்படையில் இதன் பொருள்: அல்லாஹ் கடமையாகியவைகளை செயல்படுத்தி மேலும், அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர் என்பதாகும். இச்சொல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன்வந்த இறைதூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்த பட்டுள்ளது.

நபி -நுபு எனும் மூலச் சொல்லில்இருந்து வந்த இதன் பொருள் 'உயர்ந்தவர்' என்பதாகும். நபித்துவதிக்கு 'நுபுவ்வத்' என்று பெயர். எல்லா நபிமார்களும் இறைவனால் அனுப்பபட்ட்வர்களே. இறைவனிடமிருந்து வரக்கூடிய செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மனிதர்களிலிருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

மலக்குகள்- வானவர்கள்(மலக்குகள்) மனித இனம் அல்லாத வேறோர் இனத்தினர். அவர்கள் ஒளியால் படைக்கப் பட்டவர்கள். இறைவனின் உத்தரவுகளை செய்து முடிப்பதும், இறைவனை வணங்குவதும், துதிப்பதுமே அவர்களின் பணிகளாகும். இவர்களுக்கு ஊண், உறக்கம், திருமணம், ஆசாபாசம், சந்ததி ஆகியன கிடையாது.

வஹீ- வஹீ என்றால் 'அறிவித்தல்' என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வேத அறிவிப்பு -வஹீ- என்பது வானவர்கள் மூலம் இறைத் தூதர்களுக்கு இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளை தெரிவித்தல் என்பது பொருளாகும்.

ஜின்- அல்லாஹ்வுடைய ஒரு படைப்பு ஜின்னை அல்லாஹ் நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தான். மனிதர்கள் ஜின்களை காண முடியாது. அவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. அவர்களை அல்லாஹ் தன்னை வணங்குவதற்கே படைத்துள்ளான்.

சைத்தான்- இப்லீஸின் சந்ததி ஜின் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு சந்ததிகளும், சேனைகளும் உண்டு. இவர்கள் மனித கண்களுக்கு புலப்படாதவர்கள். இவர்கள் மனிதனை நல்ல விசயங்களை விட்டு தடுப்பதும், தீய வழிக்கு அவர்களை இழுத்தும் செல்கிறார்கள்.

காபா- முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் இறைவனை வணங்குவர்த்காக மக்காவில் எழுப்பிய ஆலயம்தான் காபா (3:96) செய்வகமான அக்கட்டடம் மக்கள் அனைவரும் உள்ளே சென்று தொழ முடியாது என்பதால் அதை சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதை சுற்றிவுள்ள வளாகம் தான் மஸ்ஜிதுல்-ஹராம் -புனித பள்ளி- ஆகும். பிற்காலத்தில் இறைத் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களாலும் அவர்களின் குமாரர் இஸ்மாயில்(அலை) அவர்களாலும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இஸ்லாத்தில் காபா சிறப்பான இடத்தை வகிக்கிறது. உலகில் உள்ள முஸ்லிம்கள் அதனையே நோக்கி அல்லாஹ்வை தொழுகின்றனர்.

ஹஜ்- முஸ்லிம்களில் சக்திபெற்றவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் செய்ய வேண்டிய கடமையாக ஹஜ் திகழ்கிறது. குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று இஹ்க்ராம் அணிந்து காபா ஆலயத்தில் தொழுதல். சபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல்(ச'இ செய்தல்). அரபா, முஸ்தலிபா, மினா ஆகிய இடங்களுக்கு சென்று அங்கே செய்ய வேண்டிய கிரியைகளை நிறைவேற்றுதல் ஹஜ் ஆகும்.

உம்ரா- உம்ரா என்பது மக்காவிற்கு புனிதபயணம் மேற்கொள்வதாகும். எல்லையை வந்தடைந்ததும் குளித்து நறுமணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும். பின்னர் இக்ராம்(தைக்கபடாத வெள்ளை ஆடை) அணிந்து உம்ராவின் நிய்யத் (intentions) செய்து 'லப்பைக் உம்ரதன்' என்று தல்பியா கூற வேண்டும். மக்கா வந்து சேர்ந்ததும் காபாவை ஏழு முறை (tawaf) சுற்றி வர வேண்டும். இன்னும், அல்-சபா, மர்வா மலைக்கு இடையில் ஓடுதல் (ச'இ) . தலை முடியை இறக்க வேண்டும். ஒருவர் உம்ராவை ஓர் ஆண்டில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். உம்ராஹ் அடிப்படையில் இரண்டு வகை படும் அவை: 1. அல்-உம்ராத் அல் முபரடாஹ் (al-umrat al mufradah)- ஹஜ் அல்லாத நாட்களில் பயணம் மேற்கொள்வது.
2. உம்ராட்-அல்-தமாட்டு- (umrat -al-tammatu)- இது ஹஜ்ஜின் பயணத்தோடு இணைத்து உம்ரா செய்வது. இந்நிலையில் முதலில் உம்ராவின் கடமையை நிறைவு செய்து பின் ஹஜ்ஜின் கடமையை செய்ய வேண்டும்.

ஸஜ்தா-சுஜூது - சிரம்பணிதல் என்பது இதன் பொருளாகும். தொழுகையில் நெற்றி, மூக்கு, இரு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புகள் தரையில் படும் படி பணிந்து அதில் அல்லாஹ்வை துதிப்பதுதான் ஸஜ்தா ஆகும். இது தொழுகையின் ஓர் அங்கமாக உள்ளது. இது ஏக இறைவன் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய ஒன்றாகும்.

*-----------------------------*


அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)
Reference:
1. Al quran, jan literary&charitable trust, chennai-1 Pg.No: 933,34,35.
2. wikipedia.org

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: