தேனீக்கள் (Honey Bee)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

தேனீக்கள் (Honey Bee):

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்ரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அண்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் தேனீக்கள் காணபடுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றி காணபடுகின்றன. தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீ (Drone)
3. வேலைக்காரத் தேனீ (Workers Bee - Non Productive Female).

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல்பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப் படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கிதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புகள், வெளியுறுப்புகள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்ததக்க வேறுபல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன.

இராணித் தேனீ ஒரு கூட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும், வேலைக்கார தேனீக்கள் ஆயிரக்கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களைக் காட்டிலும் அளவில் பெரிதாகும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாய் ஆகும். இவற்றால் மட்டுமே முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்க இயலும். ஆண் தேனீக்கள் இராணித் தேனீக்களை விடச் சற்று சிறியதாகவும், வேலைக்கார தேனீக்கள் மற்ற இரு வகையைக் காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இருக்கும். அது இறப்பெய்தும் காலம் வரை மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் இல்லை. வேலைக்காரத் தேனிகளுக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் உண்டு. ஆனால் ஒரு முறை கொட்டியபின் பின்னர் திரும்ப வளருவதில்லை.

இராணித் தேனீ சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆண் தேனீக்கள் இராணித் தேனியுடன் உறவு கொண்டவுடன் உயிரிழக்கின்றன. இவை சராசரியாக 90 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேலைக்கார தேனீக்கள் சராசரியாக 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் குளிர்காலங்களில் 140 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியன. இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்ச்சியடைந்து வெளிவர 16 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றது. வேலைக்கார தேனிக் களுக்கு 21 நாட்களும் ஆகின்றது. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்த தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை (Polan Basket) என்ற உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களுக்கு இல்லை.

வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களின் குளுக்கோசைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை. கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (wax gland) வேலைக்கார தேனீக்களுக்கு மாத்திரமே அமைந்துள்ளது. மற்ற இருவகை ஈக்களுக்கும் இல்லை. இது மட்டுமல்லாது மற்ற சில அம்சங்களும் உண்டு. மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீகளே வேலைக்காரத் தேனீ ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக் காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (Wax Gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (Honey Sac) மலரின் குளுக்கோஸ் இரசாயன மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. இதைதான் எல்லாம் வல்ல இறைவன் தன் தூய வசனத்தில் தெளிவுபடுத்திவுள்ளான். விளக்கங்களே தேவை இல்லாத வார்த்தைகளினால் திருமறையின் பரிசுத்தத்திற்கு சான்று பகரும் வார்த்தைகள் இதோ!

"பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(அல்- குரான் 16: 69).

மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடைபெறுகின்றன. கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியை கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை வேலைக்காரத் தேனீக்கள் ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதனுடைய விஷப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விஷப் பையின் வாய் சிதைந்து விஷம் அவற்றின் உடலில் பரவி உயிரிழக்க காரணமாக அமைந்து விடுகின்றது. (அல்லாஹ் அக்பர்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: