இஸ்லாமிய திருமணம்-5

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...

வரதட்சணை ஓர் வன்கொடுமை:

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இதுதான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையான தீர்ப்பாகும்.

இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள்.  இருவருமே ஒருவரிடமிருந்து மற்றொருவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.  ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தை செய்கின்றனர்.  அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும். 

 • ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆன் தனது வீட்டில் இருக்கிறான். தனது தாய், தந்தை மற்றும் உறவினருடன் இருக்கிறான்.  ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.  இந்தத் தியகத்திற்க்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
 • திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை.  அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.  ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளை தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். இந்தக் காரணங்களுக் காகவும் நியாயமாக ஆண்கள் தாம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
 • இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் இந்தச் சிரமமும், சுமையும் இல்லை, பெண் தான் சிரமப் படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள்.  இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தை தாங்கிக் கொள்கிறாள்.  அத்துடன் மரணத்தின் வாசல் வரை சென்று, பிரசவித்து மீள்கிறாள்.  இந்த ஒரு காரணத்திற்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
 • பிரசவித்த பிறகு குழந்தையை பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண்தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன.  இந்த காரணத்திற்க்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பதுதான் நேர்மையானது.
 • அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
ஆகவே பெண்களுக்கு தான் ஆண்கள் மஹர் கொடுக்க வேண்டுமே தவிர, ஆண்களுக்கு வரதட்சணை பெண்களிடமிருந்து வாங்கக் கூடாது என்பதனை எந்த மனிதனும் மறுக்க முடியாது.  

வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்:

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன.  வரதட்சணை கேட்போரும்,அதை ஆதரிப் போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
 • வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
 • இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர்; ஏமாற்றபடுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப் படுகின்றனர்.  இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
 • மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்து கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.  பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர்.  இந்த பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளி களாகின்றனர்.
 • மணவாழ்வு கிடைக்காது என்று ஒரு பெண் ஓடிவிட்டாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டாலோ, அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும்.  இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்கு பங்கு இருக்கிறது.
 • வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர்.  வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர்.  இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
 • மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராக சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர்.  
 • பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மன நோயாளிகளாகி விடுகின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாக திகழும் வரதட்சணையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப் படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சனை கேட்கவே மாட்டார்கள்.


 இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: