படிப்பினை-01

   ஒளி வீசும் வான்மறையை பாரினில் வாழவந்த நமக்களித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதனைத் தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய நமது உயிரிலும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களது உறவினர்கள் மற்றும் நபித்தோழர்கள் மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் நல்லோர்கள், எம்மவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புகழ் எனும் அருளும்,ஈடேற்றமும் கிடைக்கட்டுமாக.
  இறுதி வேதம் அல்-குர்ஆன் பலவித அற்புதமான, அபூர்வமான சம்பவங்களைத் தன்னகத்தே தாங்கிவந்துள்ளது. அல்லாஹ் எவ்வளவு நுட்பமானவனோ ஞானமிக்கவனோ அவ்வாறே அவனது வார்த்தையான அல்குர்ஆனும் அமைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஒரு முஃமினுக்கு ஐயம் ஏற்பட முடியாது. எனவேதான் அச்சம்பவங்களைக் கூறும் நோக்கத்தைக் குறிப்பிடும் போது அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.            (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது( யூஸூஃப்:111)
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற காரியத்தை மேற்கொள்வதனால் சிறந்த சமுதாயம் என இறைவனால் குறிப்பிடப்பட்ட நாம்; பிரச்சாரப் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு சம்பவமே சுலைமான் (அலை) அவர்களது காலத்தில் நிகழ்ந்த எறும்பு மற்றும் ஹூத்ஹூதுடைய சம்பவமாகும்.
இதிலிருந்து நூறு படிப்பினைகள் எனும் தலைப்பில் பலஸ்தீனத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அலி இப்னு அவ்தா அல்கப்ரி (علي بن عودة الغفري) என்பவர் எழுதிய புத்தகத்தை வாசகர்களாகிய உங்களுக்கு மொழிபெயர்த்து வழங்குவதில் பெருமகிழ்வடைகிறோம்.
குறிப்பு: மூல நூலில் உள்ள ஆதாரபூர்வமற்ற கருத்துக்கள் என மொழிபெயர்ப்பாளர் கருதிய விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நம் சமூகத்துக்குப் பொருத்தமான சில விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் ஏதாவது தவறுகளைக் கண்டால் சுட்டிக்காட்டுமாறு பணிவுடன் வேண்டப்படுகிறீர்கள்.
இவண்,
மௌலவிஅல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student ),
மன்னர் சுஊத் பல்கலைக்கழகம். 
ரியாத்,சவூதி அரேபியா.
Email :  mubdllh@gmail.com   

முதல் படிப்பினை:

  அவ் எறும்பு தனது கூட்டத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டமையினாலேயே இறைவேதமாகிய திருக்குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறப்படுவதற்கான தகுதி பெற்றது.

قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ ﴿١٨﴾
      எறும்புகளே! உங்களது வசிப்பிடங்களினுள் நுழைந்து விடுங்கள். என ஓர் எறும்பு சொன்னது. (27:18)
தனது கூட்டத்தின் மீது சுலைமான் (அலை) அவர்களது பரிவாரம் செல்வார்கள் என்றுணர்ந்த அவ் எறும்பு தனது ஏனைய சகோதரர்களிடம் தமது இருப்பிடங்களினுள் நுழைந்து கொள்ளுமாறு புத்திமதி கூறியது.
அது தன்னுயிரை மாத்திரம் பற்றிக் கவலைப்படாமல் தனது முழு இனத்தைப் பற்றியும் கவலைப்பட்டு அவற்றை எச்சரித்துப் புத்திமதி கூறியது மாத்திரமன்றி தப்பிக்கும் வழியையும் தெளிவுபடுத்தியது.
பிறரது நலவுக்காகவும், வெற்றிக்காகவும் உழைக்கக் கூடியோருக்கு முன்மாதிரிக்காக வேண்டி மனித சமூகத்தின் நேர்வழிக்காக விண்ணிலிருந்து இறங்கிய மிகச்சிறந்த வேதத்தில் அவ் எறும்பினது அவ்வார்த்தைகள் பதியப்பட்டுள்ளன.
தன்னை மாத்திரம் கவனிக்கும் வணக்கசாலியை விட மற்றவர்களது வெற்றிக்காகவும் உழைப்போரின் அந்தஸ்த்து இந்த ஆயத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: பனூ இஸ்ராயீல்களிலிருந்த இரு மனிதர்களைப் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டது. அவ்விருவரில் ஒருவர் ஆலிமாக இருந்தார். அவர் பர்ழான தொழுகைகளைத் தொழுது கொண்டும் பின்பு அமர்ந்து மக்களுக்கு நல்லவற்றைப் போதித்துக் கொண்டுமிருக்கிறார். மற்றவர் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குகிறார். இருவரில் யார் சிறந்தவர்? என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் பர்ளுத் தொழுகையைத் தொழுது விட்டு மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்பவரது அந்தஸ்த்து பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குபவரை விட எவ்வளவு உயர்ந்ததென்றால் உங்களில் மிகத்தாழ்ந்தவரை விட எனக்குள்ள அந்தஸ்த்தைப் போன்றதாகும். (அத் தாரமீ:344)
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபியவர்களிடம் வணக்கசாலி மற்றும் அறிஞரைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் வணக்கசாலியை விட ஆலிமுடைய சிறப்பு உங்களில் தாழ்ந்த மனிதரை விட எனக்குள்ள அந்தஸ்த்தைப் போன்றதாகும். எனக் கூறினார்கள். (திர்மிதீ:2685)
                                                                                                         தொடரும்……

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: